நாளும் வதைபட்டுச் சாவோம்
விண்ணின்றுலவுநிலா – எமை
விட்டுப் பிரிந்ததன்றோ!
கண்ணின்றொழுகும் துளி – நீரிங்கு
கங்கையென்றாகியதோ!
என்னென்றெடு;த்துரைக்க- எம்துயரை
எவர்க்கென் றெடுத்துரைக்க?
பண்ணென்றெடுத்திசைக்க - இதுவும்
பாப்பொருளாகியதோ?
நீல நெடுந்திரை ஆழி- நாம்
நேசித்த நெல்வயற் காற்று,
வானந்தொடும் பனை உச்சி -
இவை
யாவும் விலகுண்டு போச்சோ!
தாழப் பறக்கும் வல்லூறு -
இரை
தேடித் திரிகின்ற போது
நாளும் நிலத்தினின் கீழே
நாம்
நசுங்கிச் சாவது தானோ?
தேசக் கதவுகள் மூடி – எமைத்
தெருவில் எறிந்தவர் யாரோ?
நாசக் கொலைவெறிக் காலம்
இங்கு
பேசுவதும் பெரும் பாவம.;
வாழும் வழியிழந்தேங்கும்
பாழும் உயிரிங்கு மாயும்
நாளும் பொழுதும் அல்லாட்டம்
நாம்
நாதியற்ற மந்தைக் கூட்டம்!
ஆளும் மனிதர்களிங்கு
ஆடும் சதுரங்கப் போரில்
நாமும் அகப்பட்டுக் கொண்டோம்
இனி
நாளும் வதைபட்டுச் சாவோம்!
- மதுரகவி